சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட இடங்களுக்குள் 24 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்திலும் பல மடங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதனை தடுக்க தேர்தல் ஆணையம், பறக்கும் படைகளை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் இதற்காக 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி 234 தொகுதிகளிலும் 936 படைகள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த பறக்கும் படைகளில் வருவாய் துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர் பணியில் உள்ளார். இது தவிர ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு காவலர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீடியோ கேமரா மேன் ஒருவரும் பணியில்உள்ளார். இவர்கள் 4 பேரும் பறக்கும் படை வாகனத்தில் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந்த பறக்கும் படை வாகனத்தில் வருவாய்துறை ஊழியர்கள், காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுகிறார்கள். 24 மணி நேரமும் பறக்கும் படை வாகனம் ஓய்வின்றி ரோந்து சுற்றி வரும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பறக்கும் படை வாகனத்தின் நடவடிக்கைகளை வருவாய் துறை உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் பறக்கும் படையினர் தவறாமல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் இதுவரை கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம், பரிசுப் பொருட்கள் சிக்கி உள்ளன. நேற்று முன்தினம் வரையில் ரூ.231 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை சிக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பணம் மட்டும் ரூ.84 கோடி அளவுக்கு பிடிபட்டுள்ளது.
சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பறக்கும் படை காவலர்கள் சென்னை மாநகரம் முழுவதும் கண்கொத்திபாம்பாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட இடங்களுக்குள் 24 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்திலும் பல மடங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் தினமும் 300 இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்கு புதிது புதிதாக இடங்களை கண்டறிந்து பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘சென்னையில் கூடுதலாக 100 இடங்களில் சோதனை நடத்த திட்டமிட் டுள்ளோம். இந்த சோதனை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 400 இடங்களில் ஒவ்வொரு நாளும் சோதனை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதுபோன்ற பறக்கும் படைகளின் சோதனை காரணமாக பணப்பட்டு வாடா மற்றும் பரிசுப் பொருட்களை எடுத்து செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று அந்த அதிகாரி கூறினார்.
சென்னையில் சுமார் 2,000 இடங்களில் 11 ஆயிரத்து 352 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 4 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் 1,216 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன. 30 இடங்களில் மிகவும் பதட்டமான வாக்குச் சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மையங்களில் துணை ராணுவ படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 40 கம்பெனி துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.