ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டது.
அதை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் ஊசி போடப்பட்டது.
அதன்படி தற்போது வரை 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 2 கோடியே 10 லட்சம் பேருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோயாளிகள் 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 34 கோடியாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியா முதல் கட்டமாக 5 கோடி டோஸ் மருந்துகளை தயாராக வைத்திருந்தது. அதில் 4 கோடியே 20 லட்சம் டோஸ் மருந்து முதல் கட்ட ஊசிக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஊசி போட இருப்பதால் அதிக மருந்து தேவைப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இப்போது அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட இருப்பதால் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் 50 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட உள்ளது. குறிப்பிட்ட தகுதிகள் உடைய தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மட்டுமே இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அந்த விதிமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி அதிக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி அளிக்க உள்ளனர்.
ஊசி போடுவதற்கும் அதன் பிறகு பயனாளிகளை கண்காணிப்பதற்கும் நாடு முழுவதும் அதிகம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.