வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 9 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இந்திய அளவில் 88 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைக்கு வராததால் மூடப்பட்டன. இதனால் வங்கி சேவை முழுமையாக பாதிக்கப்பட்டன. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் முடங்கின.
கடந்த 2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து வேலைநிறுத்தமும் நடைபெறுவதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டன. வங்கியின் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வங்கிகள் மூடப்பட்டதால் வியாபாரிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வர்த்தக ரீதியான பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. 2 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஏ.டி.எம்களிலும் பணம் இல்லாமல் செயலிழந்தன. பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்களில் பணம் இல்லை. நிரப்பப்பட்டு இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர்.
இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல டி.எம்.எஸ். கனரா வங்கி அலுவலகம் முன்பு அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 16 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள 2 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. சென்னை காசோலை பரிவரித்தனை நிலையத்தில் ரூ.5,150 கோடி மதிப்புள்ள 58 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கி உள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் மணிமாறன் கூறியதாவது:-
இந்த வேலைநிறுத்தம் வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்காக நடத்தப்படவில்லை. பொதுமக்கள் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதார நன்மைக்காகவும் நடைபெறுகிறது. வங்கிகள் தனியார் மயமாவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.
இந்த வேலைநிறுத்தத்தில் 5 அதிகாரிகள் சங்கம், 5 ஊழியர்கள் சங்கம் பங்கேற்றுள்ளன.