தேர்தலில் வெற்றி பெற்றதும் உண்மையான அ.தி.மு.க. அம்மா தொண்டர்கள் ஒன்றாக இணைவோம் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவருக்கு பதில் சாத்தூர் தொகுதியில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ.இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவரை டி.டி.வி. தினகரன் வரவேற்றார்.
அப்போது டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி: தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?
பதில்: பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் என்ன என்பதை சொல்கிறேன்.
கேள்வி: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதும் சீட் கிடைக்காதவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே?
பதில்: அ.தி.மு.க. அம்மா கட்சி, தலைவர் கட்சி. அ.ம.மு.க. ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்கத்தான். ஜனநாயக முறையில் போராடி இதில் வெற்றி பெறுவோம். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதும் உண்மையான அ.தி.மு.க. அம்மா தொண்டர்கள் ஒன்றாக இணைவோம்.
கேள்வி: சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், உங்களை பார்க்க வந்துள்ளாரே?
பதில்: அவர் அன்போடு வந்து எங்களிடம் சேர்ந்துள்ளார்.
கேள்வி: அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு இல்லாதவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுப்பீர்களா?
பதில்: அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களிடம் வருவார்கள். அம்மாவின் கட்சி மீட்டெடுக்கப்படும். இதுதான் நான் சொல்லும் செய்தி.
இவ்வாறு அவர் கூறினார்.