வேப்பந்தட்டை அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தீபா தனது பெரியம்மா ராஜலட்சுமியுடன் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவு சாப்பிட்ட பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.
ராஜலட்சுமி வீட்டின் முன் அறையிலும், தீபா மற்றும் குழந்தைகள் தனி அறையிலும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை சத்தமின்றி உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் தனி அறையில் இருந்த பீரோவின் சாவியை எடுத்து திறந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 52 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்த அவர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக சுவர் ஏறிக்குதித்து தப்பி சென்றனர்.
இன்று அதிகாலை எழுந்த ராஜலட்சுமி கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தீபாவை அழைத்து தகவல் தெரிவித்தார். அதன்பின்னரே நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அவர்கள் அறிந்தனர்.
இதுகுறித்து இன்று காலை தீபா கைகளத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். வீட்டில் ஆண்கள் இல்லாததை அறிந்த, பழகிய நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.21 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.