பாளை அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பழையபேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பு (வயது 44), விவசாயி. இவருக்கு சொந்தமான வயல் பாளை தாலுகா பகுதியில் உள்ளது. இவரது வயல் அருகே பர்கிட்மாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (40) என்பவருக்கும் வயல் உள்ளது.
சிவசுப்பு வயலில் அறுவடை செய்வதற்காக, நேற்று அறுவடை எந்திரத்தை கொண்டு வந்தார். அப்போது முத்துகுமார், ‘தனது வயல் வழியாக அறுவடை எந்திரத்தை கொண்டு செல்லகூடாது’ என்று தகராறு செய்தார்.
அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால், சிவசுப்புவை வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.