முன்னணி காலணி உற்பத்தியாளர் மகளிர் தினத்தையொட்டி சிறப்பு சலுகை வழங்குவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இணையவாசிகளை ஏமாற்றும் வகையிலான தகவல் வாட்ஸ்அப் செயலியில் வைரலாகி வருகிறது. அதன்படி அடிடாஸ் நிறுவனம் மகளிர் தினத்தன்று இலவச காலணிகளை வழங்குகிறது எனும் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக பலமுறை இதேபோன்ற தகவல்கள் வாட்ஸ்அப் செயலியில் வலம் வந்திருக்கின்றன. தற்போது வைரலாகும் தகவலுடன் இணைய முகவரியும் இணைக்கப்பட்டு உள்ளது. அதுவே அடிடாஸ் அதிகாரப்பூர்வ வலைதள முகவரி இல்லை. அந்த வகையில் இது அந்நிறுவனத்தின் அறிவிப்பு கிடையாது என்பதை உணர்த்திவிட்டது.
மேலும் இதுபோன்ற சலுகை அறிவித்து இருந்தால், அதுபற்றிய விவரங்கள் அடிடாஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். எனினும், இலவச காலணி வழங்குவது பற்றி எந்த தகவலும் அடிடாஸ் வலைதளம், சமூக வலைதளங்களில் பதிவிடப்படவில்லை.
அந்த வகையில் வைரலாகும் தகவலில் உள்ளது போன்று அடிடாஸ் மகளிர் தினத்தன்று இலவச காலணி வழங்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.