ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் உருவாகி வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 21 ஜனவரி 2021 வாக்கில் வாகனங்கள் உற்பத்தியில் பத்து கோடி யூனிட்களை கடந்து அசத்தியது. இதனை கொண்டாடும் வகையில் சில மோட்டார்சைக்கிள்களின் லிமிடெட் எடிஷனை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஹீரோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அந்த வரிசையில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது எக்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் புது லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வெளியீட்டுக்கு முன் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மாடல் தோற்றத்தில் தற்போது விற்பனையாகும் ஸ்டான்டர்டு வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடல் ரெட் மற்றும் வைட் நிறங்களில் உருவாகி இருக்கிறது.
எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷனின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் முன்புற டிஸ்க் மாடல் விலை ரூ. 1.04 லட்சம் என்றும் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.07 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.