கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள்.
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். ராணுவம் மீதும், போலீசார் மீதும் அவ்வப்போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிராக அந்த நாட்டின் ராணுவமும் அவ்வப்போது சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு தெற்கு ஜாபுல் மாகாணத்தில் மிஷான் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அந்த தகவல்களின் பேரில் அந்த நாட்டின் ராணுவம் நேற்றுமுன்தினம் இரவு அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் ராணுவ வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இது மட்டுமின்றி தலீபான் பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதையும், வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த இழப்புகள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.