பல படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த கிஷோர், தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என அழைக்கப்படுபவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது அறிமுக இயக்குனர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
“ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசைத்திரைப்படமாக உருவாக்க இருக்கிறார் இயக்குனர் திரவ். இவர் இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற “குற்றம் கடிதல்” படத்தில் இணை இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பில் உருவான “மகளிர் மட்டும்” படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தில் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் ஜே, மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சங்கர் ரங்கராஜன் இசையமைக்க, தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார்.