முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது பிரசாரத்தின்போது பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரத்தின்போது மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி தனது பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரசை கடுமையாக தாக்கி பேசிவருகிறார். ஊழலின் முந்தைய பதிவுகளை திரிணாமுல் காங்கிரஸ் முறியடித்து வருவதாக இன்றைய பிரசாரத்தின்போது மோடி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் மம்தா பானர்ஜி தனது பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
நந்தகுமார் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா, பாஜக கட்சி என்றால் பாரதிய ஜோகோனோ (கெட்ட) கட்சி என்று அர்த்தம் என கூறினார்.
‘நான் மக்களவை எம்.பி.யாக ஏழு முறை இருந்தேன், பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற இரக்கமற்ற, கொடூரமான பிரதமரை பார்த்ததில்லை. பாஜக என்பது அரக்கர்கள், பேய்கள், ராவணன், துரியோதனன், துச்சாதனன், அமைதியின்மை மற்றும் பயங்கரவாத கட்சி ஆகும்’ என வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தார் மம்தா பானர்ஜி.