முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக விழாக்களில் மக்கள் பங்கேற்றதே மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கொரோனா பிரச்சனையில் இருந்து அவர்கள் விடுபட வழி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானவையாகும்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில்தான் (மார்ச்) கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் போடப்பட்ட ஊரடங்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் எப்போதும் நெஞ்சை விட்டு அகலாதவைகளாகவே உள்ளன.
இதன் காரணமாகவே கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளது என்றும், எனவே மக்கள் முன்பு போல கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார். கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்றும், இதனை மக்கள் புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் பொதுமக்களோ அதனை கண்டுகொள்ளவில்லை. பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமலேயே வெளியில் சுற்றுகிறார்கள். பஸ், ரெயில் பயணங்களில் மட்டுமின்றி விமான பயணங்களிலும் ‘மாஸ்க்’ மாயமாகி இருப்பதை இப்போது காண முடிகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்குக்கு பின்னர் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே சென்று ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்டது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் நோயின் தாக்கம் குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கிலும் தாராள தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் திருமணம் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், சடங்கு உள்ளிட்ட விழாக்கள் போன்றவை அதிகமாக நடைபெற்றன.
இந்த விழாக்களின் போது கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் முழுமையாக காற்றில் பறந்தன.
முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக விழாக்களில் மக்கள் பங்கேற்றதே மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த கதறல் சத்தம் பொதுமக்களின் காதுகளை இன்னும் முழுமையாக எட்டாமலேயே உள்ளது. இதனாலேயே கொரோனா பற்றிய பயமின்றி மக்கள் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுகிறார்கள் என்று அதிகாரிகள் வேதனைப்படுகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று அதிகமாகி இருப்பது அதிகாரிகள் மத்தியில் கூடுதல் கலக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே நேற்று பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சியினர், தங்களது தொண்டர்கள் கட்சி கூட்டங்களின் போது கண்டிப்பாக முக கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் கட்சி கூட் டங்களிலும் முக கவசங்கள் காணமல் போய் உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதும், அரசின் விழிப்புணர்வும் ஒரு சிலருக்கே பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை மாஸ்க் அணியாமல் இருந்தவர்கள் தற்போது அணியத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த விழிப்புணர்வு அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும் என்பதே அதிகாரிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை மாநகர போலீசாரும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் மகேஸ்குமார் அகர்வால் நேற்று இது தொடர்பாக 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினார். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களை அழைத்து முக கவசம் அணிவதன் அவசியத்தை அவர் விளக்கி கூறினார். அருகில் உள்ள வணிக வளாகத்துக்குள் சென்றும் போலீஸ் கமிஷனர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பவானீஸ்வரி, இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், செந்தில்குமாரி, துணை ஆணையர்கள் பகலவன், பாலகிருஷ்ணன் உள்ளிட் டோரும் கொரோனா விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு முழுமையாக ஏற்பட்டால் மட்டுமே அதன் தாக்கம் அதிகரிக்காமல் இருக்கும் என்பதே அதிகாரிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
ஆனால் பலர் கொரோனா வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையிலேயே உள்ளனர். இதுபோன்றவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர் பார்ப்பாக உள்ளது.