மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டு 21 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 462 உயிரிழந்தனர். 20 ஆயிரத்து 885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது. அதே சமயம் குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது 159 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கொரோனா விகிதம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
மார்ச் 12-ந்தேதி 10 பேருக்கும், 13-ந்தேதி 14, 14-ந்தேதி 11, 15-ந்தேதி 18, 16-ந்தேதி 13, 17-ந்தேதி 19, 18-ந்தேதி 18, 19-ந்தேதி 14, 20-ந்தேதி 17, 21-ந்தேதி 22, நேற்று 34 பேருக்கும் என்கிற வேகத்தில் மளமளவென உயர தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் பொது மக்களை பீதியடையச் செய்து உள்ளது.
சில மாதங்களுக்கு பின் கொரோனா பரவல் கட்டுக்குள் வர தொடங்கியதை அடுத்து அரசு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் முக கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை பொதுமக்கள் கடைபிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கோடை காலமாக மார்ச் மாத இறுதி முதல் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே இம்முறையும் அதே அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் அதிகாரிகளிடம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் காலம் என்பதால் பிரசாரங்களில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கூடுகிறார்கள். கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கவும், பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளவும் முக கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கிருமிநாசினி, சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் போன்ற விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் அருந்த வேண்டியது அவசியம். மதுரை மாநகராட்சியில் உள்ள 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்கள், 60 வயது மேற்பட்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வணிக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாநகராட்சி மூலம் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.