காலை 8 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயில் வண்டலூர் ரெயில் நிலையத்தில் மட்டும் கிட்டதட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பணி மற்றும் தொழில் நிமித்தமாக வந்து செல்வதற்கு மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த பாதை வழியாக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ரெயில் சேவைகளை குறைத்ததோடு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல், செங்கல்பட்டில் இருந்து வரும் ரெயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டன. பராமரிப்பு காரணமாக ரெயில் சேவை மாற்றப்பட்ட நிலையில், அதன்படி பயணிகளும் ரெயில் நிலையங்களுக்கு வந்தனர். ஆனால் எந்த ரெயில்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு பின்னர் வந்து சேர்ந்து இருக்கின்றன. காலை 8 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயில் வண்டலூர் ரெயில் நிலையத்தில் மட்டும் கிட்டதட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதே ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்து மீண்டும் புறப்பட தயாரான சில நொடிகளிலேயே சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகள் இறங்கி, எப்போது சிக்னல் சரியாகும், ரெயில் புறப்படும், அலுவலகத்துக்கு மேலும் தாமதம் ஆகிவிடுமோ? என்ற பதற்றத்தில் காத்து இருந்தனர்.
அப்போது ஒரு பயணி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த சக பயணிகள் அவருக்கு குடிநீர் கொடுத்தனர். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு வந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த ரெயில், மீண்டும் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் அதே சிக்னல் பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. இப்படியாக நேற்று இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டு வந்து சேர்ந்தன. இதன் காரணமாக ரெயில்களில் கூட்ட நெரிசலும் காணப்பட்டது.
இதனால் பணி மற்றும் தொழில் நிமித்தமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரக்கூடிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.