அமீரகத்தின் மிகப்பெரிய புதிய சரக்கு கப்பல் எம்.வி.ஹபீத் தனது சேவையை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. ஹபீத் என்ற புதிய சரக்கு கப்பல் சமீபத்தில் சேவையை தொடங்குவற்காக அபுதாபி துறைமுகத்தில் பதிவு செய்தது. இந்த கப்பல் அமீரகத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என்ற பெருமையை பெறுகிறது. இந்த கப்பலை சபீன் என்ற குழுமம் வாங்கியுள்ளது.
அமீரகம் மற்றும் ஓமன் நாட்டின் எல்லைப் பகுதியையொட்டி மிகப்பெரிய மலை ஜெபல் ஹபீத் உள்ளது. இந்த மலையின் நினைவாக கப்பலுக்கு எம்.வி. ஹபீத் என பெயரிடப்பட்டுள்ளது.
ரோமானியா நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த கப்பலை அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த கப்பலில் அதிக அளவில் சரக்குகளை ஏற்றும் வகையில் கிரேன் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கப்பல் 254 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது ஆகும். இந்த கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் வகையில் 4 மிகப்பெரிய கிரேன்கள் உள்ளது. மேலும் அதிகமான அளவு பொருட்களை வைக்க 7 சரக்கு பெட்டகங்கள் வைக்கும் அறைகள் உள்ளது.
ஒரு லட்சத்து ஆயிரத்து 648 டன் சரக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கொள்ளளவு கொண்டது. 15 ஆயிரத்து 200 குதிரைத் திறன் கொண்ட டீசல் என்ஜின் இதில் உள்ளது.
அபுதாபி துறைமுகத்தின் சேவைகள் மேலும் விரிவடைய இந்த புதிய கப்பல் உதவியாக இருக்கும். விரைவில் இந்த சரக்கு கப்பல் பயன்பாட்டுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சரக்கு கப்பலின் வீடியோ அபுதாபி துறைமுகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.