இனி வீட்டுக்கும் செல்ல மாட்டேன், அரசு காப்பகங்களுக்கு செல்வதையும் நான் விரும்பவில்லை என்று மூதாட்டி கூறினார்.
பெண்களை கொண்டாடும் மகளிர் தினமான இன்று வீதிகளில் திண்டாடும் பெண்களின் பரிதாப நிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமாபுரம் அரசமரம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 75 வயதுடைய ஒரு மூதாட்டியை கடந்த 6 மாதமாக பார்க்க முடிகிறது. அந்த வழியாக செல்பவர்கள் பரிதாபப்பட்டு பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார். அருகில் உள்ள ஒரு ஓட்டலில் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு இரவில் கடை திண்ணையில் படுத்து தூங்கிவிடுகிறார்.
வீதியில் தவித்தாலும் இந்த மாதிரி பெண்களின் பின்னணியில் ஒரு சோக கதை இருக்கும். அந்த வகையில் இந்த சகுந்தலா பாட்டியின் கதை வருமாறு:-
சகுந்தலா இளம் வயதில் அம்பத்தூரை சேர்ந்த முனிசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகள் பிறந்த நிலையில் முனிய சாமியை பிரிந்துவிட்டார்.
அதன்பிறகு தனது ஒரே மகளை வளர்ப்பதற்காக சகுந்தலா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். கல்லும், மண்ணும் சுமந்து தனது மகளை வளர்த்து வில்லிவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கால சக்கரம் சுழன்றது. மகள் குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத சகுந்தலா தொடர்ந்து வேலைக்கு சென்று சம்பாதித்து இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட விபத்தில் சகுந்தலாவுக்கு கால் முறிந்தது. கால் குணமானாலும் அதன்பிறகு அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
மகள் வீட்டில் இருந்த சகுந்தலா பக்கத்து வீடுகளில் சென்று பேசுவாராம். இதை ஒரு காரணமாக வைத்து மகளும், பேரனும் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். அதன் பிறகு கடந்த 6 மாதமாக இந்த அரசமரத்தடிதான் சகுந்தலாவுக்கு தஞ்சமாகி விட்டது.
தனது அன்றாட வாழ்க்கை பற்றி சகுந்தலா கூறியதாவது:-
இந்த இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன். யாராவது உணவு தருகிறார்கள். கல்லூரி செல்லும் மாணவர்கள் எனக்கு பணம் தருவதுண்டு. ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். எனக்கு பணம் ஏன்?
எப்போது ஆண்டவர் என்னை அழைப்பாரோ அதுவரை இங்கேயே வாழ்வேன். இனி வீட்டுக்கும் செல்ல மாட்டேன். அரசு காப்பகங்களுக்கு செல்வதையும் நான் விரும்பவில்லை. என்னைப்போல் தெருவுக்கு வந்த பல பெண்கள் இருக்கிறார்கள். கே.கே.நகர், கண்ணகி நகரில் பல பெண்களை பார்க்கலாம் என்றார்.
ஆனால் கடைசி வரை தனது மகள், பேரன் பெயர்களை சொல்ல மறுத்து விட்டார். அதுதான் தாய் பாசம். தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்ற உணர்வு.