அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இதே மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தார்.
நியூயார்க்கில் 1914ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948 இல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார்.
1952 ஆம் ஆண்டில் கொள்ளை நோய்க்கு 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 21,269 பேர் முடக்குவாதத்திற்குள்ளாயினர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார். பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார். 1955 ஏப்ரல் 12ல் சால்க் தடுப்பூசி வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு சால்க் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.
அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் “ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?” எனக் கேட்டார்.
1960-ல் கலிபோர்னியாவில் உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை சால்க் நிறுவினார். இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது. சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.வி.க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.