புனேயில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தவான், (98), விராட் கோலி (56), கேஎல் ராகுல் (62), குருணால் பாண்ட்யா (58) அரைசதம் விளாசினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் ஸ்கோர் 15.1 ஓவரில் 64 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 பந்தில் 28 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி 60 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 34.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். தவான் சிறப்பாக விளையாடி சதம் நோக்கி சென்றார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 98 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 106 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர் விளாசினார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 38.1 ஓவரில் 197 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் வெளியேறினார். அப்போது இந்தியா 40.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் குருணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குருணால் பாண்ட்யா 26 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் அறிமுக போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மறுமுனையில் கேஎல் ராகுல் 39 பந்தில் அரைசதம் விளாசினார். இருவரின் அதிரடியால் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. குருணால் பாண்ட்யா 31 பந்தில் 7 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 58 ரன்களுடனும், கேஎல் ராகுல் 43 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 8 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், மார்க் வுட் 10 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.