தஞ்சையில் உள்ள 2 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு இதுவரை 148-ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் கடந்த வாரம் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த பள்ளியில் மட்டும் 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 69 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
அம்மாபேட்டை பள்ளியை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மதுக்கூர் அடுத்த ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவர், தஞ்சை தனியார் மெட்ரிக் பள்ளியில் 21 மாணவ-மாணவிகள், 2 ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் 2 ஆசிரியர்கள், 7 மாணவிகள், தஞ்சை தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியை, 6 மாணவிகள், ஒரத்தநாடு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்கள் என இதுவரை 11 பள்ளிகளில் 88 மாணவ-மாணவிகள், 26 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதேப்போல் தஞ்சை அடுத்த வல்லம் நிகர்நிலை பல்கலை மாணவர்கள் 2 பேர், கும்பகோணம் கல்லூரியில் 4 மாணவர்கள், திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் நேற்று இரவு வரை பள்ளி, கல்லூரிகளை சேர்த்து 93 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் என 119 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கடந்த 2 நாட்களாக முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இன்றும் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று காலை வந்த முடிவுகளில் தஞ்சையில் உள்ள 2 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு இதுவரை 148-ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவலுக்கு காரணமாக அலட்சியமாக இருந்ததற்காக அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எற்கனவே கலெக்டர் கோவிந்தராவ் அபராதம் விதித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12 ஆயிரம், தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். பேரிடர் மேலாண்மை சட்டத்தை முறையாக அமல்படுத்தாத காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பல பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 3 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா இருப்பது 2 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய நாள் அவர் திருச்சியில் உள்ள தனது கணவரை பார்க்க சென்றுள்ளார். தற்போது அவருக்கும் கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மாபேட்டை பள்ளி மாணவிகள் 51 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.