கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேருக்கு நேர் மோதுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.
அந்த தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகிறார்கள்.
இதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குமரி மாவட்டம் வந்து தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் வருகிற 30-ந் தேதி குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி நாளை குமரி மாவட்டம் வருவதாகவும், அன்று கன்னியாகுமரி எம்.பி. தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.