காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அசாம் மாநிலம் ஜோர்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நேற்று பிரதமர் தனது பிரசாரத்தின்போது பேசியதை கேட்டேன். வளர்ச்சியைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தீவிரமாக பேசினார். அவர் அசாமின் வளர்ச்சி, அசாமில் பாஜக எப்படி செயல்படவேண்டும் என்பது பற்றிதான் பேசுவதாக நினைத்தேன். ஆனால், அவர் 22 வயது பெண்ணின் டுவிட்டர் பதிவைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
மக்கள் வெள்ளத்தில் மூழ்கும்போது நீங்கள் ஏன் அசாமுக்கு வரவில்லை? பாஜக அளித்த பெரிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாதபோது, நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படவில்லை? நீங்கள் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசினீர்களா?
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 350 ரூபாய் தருவோம் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அந்த தொழிலாளர்களின் வலியை பிரதமர் உணரவில்லையா?