தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் பெற்றது. போராடி பெற்ற இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கி விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா 20 தொகுதிகளிலும், பா.ம.க. 23 தொகுதிகளிலும், த.மா.கா. 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த அணியில் இடம்பெற்ற அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு என அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டனர்.
ஆனால் இந்த கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை இறுதி செய்வதில் தாமதம் செய்து வருகிறது.
மாநில நிர்வாகிகள் தரப்பிலான குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 பேர் வீதம் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலுடன் மாநில தலைவர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்கள்.
மேலிட நிர்வாகிகள் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். போட்டி இல்லாத தொகுதிகளில் வேட்பாளர்களிடம் வேலையை தொடங்கும்படி வாய்வழியாக உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நெல்லை தொகுதியில் பாரதிய ஜனதா துணை தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்றே வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டார்.
கோவை தெற்கு தொகுதியில் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தில் குப்புராம், காரைக்குடியில் எச்.ராஜா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து இன்று மாலைக்குள் வெளியிடுவதில் கட்சி மேலிடம் தீவிரமாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை மிகப்பெரிய இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் பெற்றது. போராடி பெற்ற இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.
காங்கிரசை பொறுத்தவரை கட்சியை விட கோஷ்டிகளே வலிமையானது. கோட்டா முறைப்படி தலைவர்கள் தொகுதிகளை பிரிப்பதில்தான் அடித்துக் கொள்வார்கள்.
இந்த தேர்தலிலும் அது தான் நடக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டது. ஒவ்வொரு தலைவர்களும் அவர்களது வாரிசுகள், ஆதரவாளர்களை குறி வைத்து நெருக்கடி கொடுத்தனர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. தரப்பு 4 தொகுதிகளையும், இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தங்கள் வாரிசுகளுக்காகவும், ஆதரவாளர்களுக்காகவும் தலா 2 தொகுதிகள் வரை பெற்று விட்டதாகவும், கார்த்தி சிதம்பரம் எம்.பி., செல்லக்குமார் எம்.பி. ஆகியோர் தலா ஒரு தொகுதி என்று பெற்றுக்கொண்டதாகவும், மாநில தலைவர் 2 தொகுதிகள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தின் உச்சக்கட்டமாக விஷ்ணு பிரசாத் எம்.பி. கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று டெல்லியில் சோனியா தலைமையில் தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.