பா.ஜனதா கட்சி எங்களோடு மோதாமல் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பங்குரா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் மிக ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-
மேற்குவங்காளத்துக்கு என்று தனி கலாசாரமும், பண்பாடுகளும் உள்ளன. இதை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் மேற்குவங்காளத்தின் கலாசாரத்தை பாதுகாக்க முடியாது.
மக்கள் என்ன ஆடை அணிய வேண்டும். என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தான் சொல்வார்கள். கர்ப்பிணி பெண்கள் முட்டை கூட சாப்பிடக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.
மத்தியபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி மதிய உணவில் முட்டை வழங்குவது நர மாமிசம் சாப்பிடுவதற்கு சமம் என்று கூறி இருக்கிறார். உத்தரகாண்ட் முதல்-மந்திரி பெண்கள் அணியும் ஜீன்ஸ் ஆடை பற்றி விமர்சிக்கிறார்.
இப்படிப்பட்டவர்கள் கையில் மேற்குவங்காளம் சென்றால் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தற்போதைய நிலையில் மேற்குவங்காளத்தை பாதுகாக்க வேண்டும். இதற்கு அனைத்து மக்களும் ஒன்றுதிரள வேண்டும். கம்யூனிஸ்டு கட்சியினருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மேற்கு வங்காளத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.
எனவே கம்யூனிஸ்டு கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சிக்கோ, பா.ஜனதாவுக்கோ ஓட்டளிக்க வேண்டும். திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்.
பிரதமர் மோடி 15 லட்ச ரூபாயை உங்கள் வங்கி கணக்கில் போடுவேன் என்று கூறினாரே அது கிடைத்ததா? ஓட்டு போடுவதற்கு முன்பு அதை ஒருமுறை நினைத்துக் கொண்டு ஓட்டுபோடுங்கள்.
மேற்குவங்காளத்தில் பா.ஜனதா பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் என பலவற்றை பா.ஜனதா கூறுகிறது. ஆனால் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே செய்து விட்டோம்.
கிராமம், நகராட்சி, பேரூர்களில் ஏற்கனவே 50 சதவீத இடஒதுக்கீடு நாங்கள் வழங்கி இருக்கிறோம். வேலைவாய்ப்பு, கல்வி அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த மாநிலத்தில் பா.ஜனதா கட்சி எங்களோடு மோதாமல் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது. எல்லா இடத்திலும் நாங்கள் சவால் அளிப்போம். நான் இப்போது ஒற்றை காலில் நின்று போராடிக்கொண்டு இருக்கிறேன். நான் ஒரு போதும் போராட்ட களத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்.
காலில் காயம் ஏற்பட்டதற்காக நான் முடங்கி கிடந்தால் பா.ஜனதா ஆட்சியை பிடித்துவிடும். நான் அரசியல் களத்தில் இருந்து வெளியேறினால் மாநிலத்தின் நிலைமை மோசமாகிவிடும்.
எனவே தான் ஒரு கால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் பிரசாரத்தை விடக்கூடாது என்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். பா.ஜனதாவை விரட்டி அடிப்பதற்கு எனக்கு ஒரு கால் போதும். எனது கடைசி மூச்சு உள்ளவரை நான் முடங்கமாட்டேன்.
இப்போது நான் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவேன். மம்தா பானர்ஜிக்கு கடைசி காலம் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள். இது மக்களை திசைதிருப்பும் முயற்சி. மேற்குவங்காள மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்கள் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்கள் என்பது 2-ந்தேதி தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.