பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசத்தில் இன்று காலை நிலவரப்படி 115.15 அடி நீர் இருப்பு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சேரன்மகாதேவி, அம்பை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 1 மணி அளவில் சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் நெல் அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அம்பை பகுதியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 நெல்மூட்டைகள் நனைந்து நாசமாகியது.
பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசத்தில் இன்று காலை நிலவரப்படி 115.15 அடி நீர் இருப்பு உள்ளது.
சேர்வலாறில் 127 அடியும், மணிமுத்தாறில் 103.25 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 84.25 அடியும், மணிமுத்தாறில் 89.80 அடியும் நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான அணைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் நீர் இருப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்ததால் அணைகளில் இருந்து பாசனத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சராசரியாக இதுவரை 19.15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் நேற்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புளியங்குடியில் மாலையில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. அச்சன்புதூர், கடையநல்லூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதே போல் செங்கோட்டை, புளியரை பகுதியிலும் நேற்று சுமார் 2 மணி நேரம் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.