பழைய வாகனங்களை அழிக்கும் முடிவால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் மேம்படும் என சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான கொள்கை விளக்கத்தை தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தயாரித்தது. இதன்படி தனி நபர் உபயோக வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையால் ஆட்டோமொபைல் துறையின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ.4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயரும்.
அமைச்சகத்தின் கணக்குப்படி 51 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலானவை. இலகு ரக வாகனங்களில் 34 லட்சம் 15 ஆண்டுகளுக்கு மேலானவை. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் எண்ணிக்கை 17 லட்சமாக உள்ளது. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையால் வழக்கமான புதிய வாகனங்கள் வெளியிடும் புகை அளவைக் காட்டிலும் 10 முதல் 12 மடங்கு அதிகம்.
பழைய வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றை காட்டும் தனி நபர் வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் வாங்குதற்கான விலையில் 5 சதவீத சலுகை அளிக்கப்படும். இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சான்றை காட்டும் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.
இதனால் வாகன விற்பனை அதிகரிக்கும். எரிபொருள் நுகர்வு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். வாகனங்கள் புதிதாக இருப்பதால் பயணமும் பாதுகாப்பானதாக அமையும்.
மேலும் வாகனங்களை அழிக்கும் பணியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த நிறுவன அந்தஸ்தைப் பெறும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் மறு சுழற்சிக்கு உதவியாக இருக்கும். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
20 ஆண்டுக்கு மேற்பட்ட பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் 2024 ஜூன் 1க்குள் பிட்னஸ் சான்றிதழ் பெற வேண்டும். அப்படி அந்த வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் பெற தவறினாலோ அல்லது பதிவு புதுப்பிக்கவில்லை என்றாலோ பதிவு ரத்து செய்யப்படும்.
15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.