தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தொற்று உறுதி செய்யப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 வயதுடைய நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்த அவரது உறவினர்களுக்கு கொக்கிரகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 2 ஆண்கள், 2 பெண்கள் என ஒரே வீட்டில் வசிக்கும் 4 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட 4 பேருமே 40 வயதுக்கு மேல் உடையவர்கள்.
அவர்கள் 4 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவர்கள் வசிக்கும் பாளை தெற்கு பஜார் அருகே உள்ள முனை ஆடுவார் நாயனார் தெரு முனையை கம்புகளால் அடைத்து சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.
மேலும் அந்த தெரு முனையில், இது கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி என பேனர் கட்டி உள்ளனர். அவர்கள் வீடு மற்றும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.