நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
மிளகு, உப்பு காணிக்கை
உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள்.
மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் பங்குனி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மாரியம்மனை நகர்வலம் அழைத்து செல்லும் கஜேந்திரன் யானை
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான சிம்ம வாகனத்திலும், ரிஷப வாகனத்திலும், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும்போது கோவில் யானை கஜேந்திரன் முன் செல்லும். மாரியம்மனை கஜேந்திரன் யானை நகர்வலம் அழைத்து செல்லும் கண்கொள்ளா காட்சியை அனைத்து தரப்பினரும் கண்டுகளித்து, அம்மன் அருளை பெறுவார்கள்.
வாழைப்பழம் சூறையிடுதல்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.