மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.