திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 10 முதல் 15 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 189ஆக உயர்ந்துள்ளது. தற்போது 124 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை கடந்து திருப்பூருக்கு கண்ணனூர்-யஷ்வந்த்பூர், எர்ணாகுளம்-காரைக்கால், பெங்களூரு, பாட்னா, திருவனந்தபுரம்-கோரக்பூர், ஆலப்புழா-தன்பாத் உள்ளிட்ட ரெயில்கள் தினமும் வருகின்றன. தினமும் 500பேர் வீதம் 4000 பேர் கேரளாவில் இருந்து வருகின்றனர்.
இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு இருந்தும், திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்குவோரை கண்காணிப்பது இல்லை. முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரம் வழியாக வெளியேறுபவரிடம் டிக்கெட் உள்ளதா? என்ற வழக்கமான பரிசோதனை மட்டுமே தொடர்கிறது.
உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட எந்தவித பரிசோதனைகளும் நடத்தப்படாமல் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து பலர் கொரோனா பாதிப்புடன் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருப்பூரில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே ரெயில்வே மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே இன்று திருப்பூர் மாநகர் பகுதியில் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளார்களா? கொரோனா தடுப்பு விதி முறைகளை முறையாக கையாள்கின்றனரா? என்று ஆய்வு நடத்த உள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.