சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான கோம்பூர் சோதனைச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பென்னாகரம் சட்டசபை தொகுதி பறக்கும் படை அலுவலர் பிரபாகரன் தலைமையில் போலீசார் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பறக்கும் படையினர் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
இதேபோல் சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான கோம்பூர் சோதனைச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு தலைவர் மோகன் தலைமையில் போலீசார் மஞ்சவாடி கணவாய் முதல் ஒடசல்பட்டி கூட்ரோடு மற்றும் தொகுதி முழுவதும் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.