5 மாநிலங்களில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு தடுப்பூசி திட்டத்தின்கீழ், லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகமான ‘நிர்வாச்சன் சதனில்’ பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நபராக, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார் ஆகியோர் நேற்று முதல் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் முன்களப் பணியாளர்கள் என்று சமீபத்தில் அறிவித்த தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் பணிக்கு முன்னதாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். தடுப்பூசி போடுவது, அவர்களை அச்சமின்றி தேர்தல் பணியாற்ற வைக்கும் என்று அவர் கூறினார்.
5 மாநிலங்களில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு தடுப்பூசி திட்டத்தின்கீழ், லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.