சட்டசபை பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பொதுவானவர் என்பதால் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது. அதற்கான பணிகளிலும் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளிலும் தேர்தல் ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை ரத்து செய்யக்கோரி கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே தேர்தல் நடைபெற உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டசபை பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பொதுவானவர் என்பதால் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கமுடியாது என கூறி பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.