வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்கிறார்கள்.
மலையின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.