புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஒபாமா ஆட்சியின் கீழ் அமெரிக்கா முதல் நாடாக இணைந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த டிரம்ப், இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதனை காரணம் காட்டி கடந்த 2017-ம் ஆண்டு பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முறைப்படி வெளியேறியது.
இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் ஜனாதிபதியானால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார்.
அதன்படியே அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முறைப்படி மீண்டும் இணைந்தது.
இந்தநிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன. மிசோரி மாகாணத்தில் அட்டர்னி ஜெனரல் ஏரிக் ஸ்மித் தலைமையில் ஆர்கன்சாஸ், அரிசோனா, இண்டியானா, கன்சாஸ், மென்டோனா, நெப்ராஸ்கா, ஓஹியோ, ஒக்லஹோமா, தெற்கு கரோலினா, டென்னிசி மற்றும் உட்டா ஆகிய மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மிசோரி அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான ஜோ பைடன் நிர்வாகத்தின் உத்தரவு அமெரிக்க பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும். வரவிருக்கும் 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் அல்லது டிரில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது நிர்வாகத்துக்கு எதிராக மாகாண அரசுகள் தொடர்ந்துள்ள வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.