கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியை அண்ணன் குடும்பத்தினர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கெங்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு பழனிவேல் (வயது 60). சண்முகம் (58). என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கலியபெருமாள் அவரது 2-வது மகன் சண்முகத்தின் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து கலியபெருமாள் அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை சண்முகத்துக்கு எழுதி கொடுத்தார்.
இதை அறிந்த பழனிவேல் அவரது தம்பி சண்முகத்திடம் சென்று அந்த நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகவும், தனக்குரிய பாகத்தை எழுதிதருமாறு கேட்டார். அதற்கு சண்முகம் மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சண்முகம் அவரது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பழனிவேல், அவரது மனைவி செல்வி (37), மகன் தெய்வேந்திரன் (21) ஆகிய 3 பேரும் சண்முகத்தின் வீட்டுக்கு சென்றனர்.
சண்முகத்தின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமியை உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சண்முகம் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனலட்சுமி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து பழனிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக பழனிவேல், செல்வி, தெய்வேந்திரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலை வீசி தேடிவருகின்றனர்.
சொத்து தகராறில் தம்பியை அண்ணன் குடும்பத்தினர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.