நந்திகிராம் தொகுதியில் தன் மகன் சுவேந்து அதிகாரி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று சிசிர் அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணாமுல் காங்கிரசில் எம்பியுமான சிசிர் அதிகாரி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். ஏக்ராவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
மேலும், நந்திகிராம் தொகுதியில் தன் மகன் சுவேந்து அதிகாரி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், நந்திகிராம் சென்று பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
சுவேந்து அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் பாஜகவில் இணைந்த பிறகு, அவரது சகோதரர் சவுமேந்து அதிகாரியும் பாஜகவில் சேர்ந்தார். அவரது தந்தை சிசிர் அதிகாரியும் பாஜகவில் இணைவார் என பேசப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக தலைவர் மன்சுக் மாண்ட்வியா, சிசிர் அதிகாரியை சந்தித்து அமித் ஷாவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
சிசிர் அதிகாரியின் மற்றொரு மகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான திப்யேந்து அதிகாரியும் பாஜகவில் சேரலாம் என கூறப்படுகிறது.