சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 69 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று இருக்கும் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 1-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ இறுதி சுற்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான நவோமி கிரஹாமிடம் (அமெரிக்கா) வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஜாஸ்மின் 0-5 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான இர்மா தெஸ்டாவிடம் (இத்தாலி) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை அள்ளியது.