முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் மாடசாமி சுந்தரராஜன் உத்தரவின்பேரில் அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் கொரோனோ வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் சீமான் மற்றும் கடை வியாபாரிகள், சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் செயல் அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:- முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமுதாய இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பேரூராட்சி, இளநிலை உதவியாளர்கள் கருப்பசாமி, ஆஷிக் ராஜா, வரித்தண்டலர் குணசேகரி, பரப்புரையாளர் மகாராணி உள்பட பலர் பேரூராட்சியில் கடைவீதிகளில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடை வெளியை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்தனர். கடைகளில் வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.