தேர்தல் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12-ந் தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி தேர்தல் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்தி குளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே தலா 21 குழுக்கள் வீதம் மொத்தம் 126 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையில் 5 பொது பார்வையாளர்கள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி நிலையில் 3 தேர்தல் செலவின பார்வையாளர்கள், ஐ.பி.எஸ். அதிகாரி நிலையில் ஒரு காவல்துறை பார்வையாளர்கள் என மொத்தம் 9 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது பார்வையாளர்களாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு டெல்லியைச் சேர்ந்த ஜூஜ்ஜா வரபு பாலாஜி, விளாத்திகுளம் தொகுதிக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த டோர்கே செர்லிங் நெகி, திருச்செந்தூர் தொகுதிக்கு உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுசில்குமார் பட்டேல், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உத்தரகாண்டைச் சேர்ந்த சாவின்பன்சால், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அனில்குமார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்களாக விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி தொகுதிக்கு ஏ.எஸ்.சான்ட், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு ராகேஷ்தீபக், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு சுரேந்திரகுமார் மிஸ்ரா ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து காவல் துறை பார்வையாளராக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்.அதிகாரி, சப்யாசாச்சி ராமன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதையொட்டி செலவின பார்வையாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு வந்து தங்களது பணிகளை தொடங்குகின்றனர். இதற்காக அவர்கள் நாளை தூத்துக்குடி மாவட்டம் வரஉள்ளனர்.
அதேபோல் காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் வருகிற 19-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார்கள்.