52 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பகோணம் மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜையை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சந்திரமவுலீஸ்வரருக்கு தினமும் பூஜை நடத்துவது வழக்கம். சங்கராச்சாரியார் சுவாமிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடன் அந்த சுவாமியையும் கொண்டுசென்று பூஜை நடத்துவார்.
கடந்த 1969-ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்த போது, சங்கர மடத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மகா சிவராத்திரி பூஜையை நடத்தினார்.
இந்தநிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 3-ந் தேதி முதல் கும்பகோணம் சங்கர மடத்தில் தங்கி பூஜைகளை நடத்தி வருகிறார். வருகிற 14-ந் தேதி வரை இந்த மடத்தில் சுவாமிகள் தங்கி பூஜைகள் செய்ய உள்ளார்.
வருகிற 11-ந் தேதி சிவராத்திரி என்பதால், அன்றைய தினம் சங்கராச்சாரியார் கும்பகோணத்தில் உள்ள மடத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜையை நடத்துகிறார்.
52 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பகோணம் மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜையை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கும்பகோணம் மடத்தில் வேத பாராயணம், நாமசங்கீர்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஏகாதச ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு ரெட்டிராயர் குளம் கீழ்கரையில் உள்ள ராம மந்திர மடத்தில் ஆச்சார்ய சுவாமிகளுக்கு 108 தங்க காசுகளால் ஸ்வர்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.