கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் : பிரதமர் மோடி

 

பிரதமர் மோடி
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தின் 13-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 4 தீயணைப்பு படை வீரர்கள், 2 ரெயில்வே அதிகாரி, ஒரு காவல் அதிகாரி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.  தீ விபத்தில் சிக்கி  உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயெல் கூறும்பொழுது, தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் மாநில அரசுக்கு அனைத்து சாத்தியப்பட்ட உதவிகளும் வழங்கப்படும்.  ரெயில்வே துறையின் 4 முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களை கொண்டு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.