மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 989 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுபோல், இரண்டாம் கட்டமாக 5 ஆயிரத்து 358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடுவதற்காக, தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ந்தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயது வரை உள்ள இணை நோயாளிகளுக்கும், சட்டமன்ற தேர்தலில் ஈடுபட இருக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்காக மதுரை மாவட்டத்தில் 25 அரசு ஆஸ்பத்திரிகளும், 36 தனியார் மருத்துவமனைகளும் என 61 மையங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல், தேர்தல் பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்துள்ள துணை ராணுவப்படை வீரர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
மதுரையில் இதுவரை 40 ஆயிரத்து 770 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இவர்களில், 23 ஆயிரத்து 485 பேர் சுகாதாரப்பணியாளர்கள். 6 ஆயிரத்து 316 பேர் முன் களப் பணியாளர்கள். 4 ஆயிரத்து 788 பேர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
இதுபோல், 60 வயதை கடந்த 7 ஆயிரத்து 764 பேருக்கும், இணை நோயாளிகள் 3 ஆயிரத்து 205 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரையில் 2 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுபோல், இரண்டாம் கட்டமாக 5 ஆயிரத்து 358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான கோவின் செயலியில் பதிவு செய்யாதவர்கள், ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் கொரோனா தடுப்பூசிபோட வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.