கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும். வீடுகளில் உள்ள மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் தேவையின்றி வெளியில் நடமாடக்கூடாது.
கொரோனா தடுப்பு ஆலோசனை குழு கூறியுள்ள எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். நமது எந்த பணிக்கும் கொரோனா விலக்கு அளிப்பது இல்லை. அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. கொரோனாவை தடுப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்குமாறு முதல்-மந்திரியிடம் கூறுவேன்.
இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இது அவசியம். மாநிலத்தின் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.