கொரோனா அதிகரிப்பு எதிரொலியால், ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்பட 8 நகரங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கி வரும் சந்தைகளை இரவு 10 மணிக்கு மேல் மூடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தவிர ராஜஸ்தானுக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் கொரோனா பரிசோதனை (72 மணி நேரத்துக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது) செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.