தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் முதல்முறையாக தோல்வி அடைந்திருக்கிறார். அவரை ரஷியாவின் லோப்சன் சாய்த்தார்.
இந்த மோதல் 8 ரவுண்டுகளை கொண்டது. ஒவ்வொரு ரவுண்டும் 3 நிமிடங்கள் உள்ளடக்கியதாகும். இதில் முதல் சுற்றிலேயே தன்னுடைய உயரத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆர்டிஷ் லோப்சன், விஜேந்தருக்கு எதிராக தாக்குதலை தொடுத்தார். முதலில் விஜேந்தர் சற்று தடுமாறினாலும், 2-வது சுற்றில் தகுந்த பதிலடி கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகு லோப்சனின் கை மீண்டும் ஓங்கியது. அவரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விஜேந்தர் சிங் சில சமயங்களில் தடுமாறி களத்தில் சரிந்து எழுந்தார். 5-வது சுற்றில் லோப்சன் விட்ட குத்தில் விஜேந்தரின் முக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் துவண்டு போன விஜேந்தர் இதற்கு மேல் தன்னால் தொடர்ந்து போட்டியிட முடியாது என்று ஒதுங்கினார். எனவே லோப்சன் ‘நாக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான விஜேந்தர் சிங் தொழில்முறை போட்டியில் அடியெடுத்து வைத்ததில் இருந்து தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தார். தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வாகை சூடி இருந்த அவரது வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று சூளுரைத்து இருந்த லோப்சன் சொன்னபடியே அதனை செய்தும் காட்டினார். கொரோனா பரவல் காரணமாக 15 மாத இடைவெளிக்கு பிறகு களம் கண்ட விஜேந்தர் சிங்கின் ஆட்டத்தில் தொய்வை காண முடிந்தது.
வெற்றிக்கு பிறகு லோப்சன் கூறுகையில் ‘சிறந்த வீரரான விஜேந்தர் சிங்குக்கு எதிரான எனது வியூகம் கைகொடுத்தது. இந்த போட்டி அருமையான அனுபவமாகும். விஜேந்தரின் வெற்றிப் பயணத்தை முறியடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
விஜேந்தர் சிங் கூறுகையில், ‘இது ஒரு சிறந்த போட்டியாகும். லோப்சன் இளமையும், வலிமையும் மிக்க போட்டியாளராக உள்ளார். சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து மாஸ்கோவில் நடைபெறும் போட்டியில் லோப்சனை வீழ்த்துவேன்’ என்று குறிப்பிட்டார்.