காரிமங்கலம் அருகே குடிசை தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி உடல் கருகி இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி ஊராட்சி குண்டுகள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மகன் வீட்டில் வேடியப்பன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேடியப்பன் தோட்டத்தில் உள்ள குடிசையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வேடியப்பன் உடல் கருகி பிணமாக கிடந்தார். மேலும் குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இ்துகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து தீயில் கருகி இறந்த வேடியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிசையில் தீப்பிடித்ததால் தூங்கிக்கொண்டு இருந்த விவசாயி உடல் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.