பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.
இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பதுபோன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன.
இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.
அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம்சாட்டி 1922-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் ஆறு ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதையடுத்து இரண்டே ஆண்டுகளில் காந்தி விடுதலை ஆனார்.