காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் இலை பறிக்க முயற்சித்து வருகின்றனர். மார்ச் 2 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தின் தேயிலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், தேயிலை தோட்டத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் காங்கிரஸ் சார்பில் பகிரப்பட்டு இருக்கிறது. இரண்டு புகைப்படங்களும் அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை அசாம் மாநிலத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இரண்டு புகைப்படங்களும் தாய்வானில் எடுக்கப்பட்டவை ஆகும். இதே தகவலை பாஜக தலைவரும் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.