தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சின்னத்துரை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் ராமலெட்சுமி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவருடன் நெருக்கமாக பழகிய ராமலெட்சுமி கர்ப்பமாகி உள்ளார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனை வேறு ஒருவருக்கு அவர் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தனது கணவரின் வீட்டை கேட்டு சின்னத்துரையின் அண்ணன் சேகரிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை எல்லாம் சேகர் கண்டித்துள்ளார்.
ஆனால் ராமலெட்சுமி கேட்கவில்லை. இதனால் அந்த கிராமம் முழுவதும் பொதுமக்கள் தங்களை பற்றி தவறாக நினைப்பார்கள் என்று கருதிய சேகர், ராமலெட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு ராமலெட்சுமியின் வீட்டிற்கு சென்ற சேகர், இனியாவது திருந்தி வாழும்படி கூறி உள்ளார். ஆனால் அவர் கேட்காததால் ஆத்திரம் அடைந்த சேகர் அரிவாளால் ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராமலெட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலெட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.