கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 49 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 20 ஆயிரத்து 173 பேரில் 15 ஆயிரத்து 974 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலனின்றி 129 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 106 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி பகுதிகளில் கடந்த 14 நாட்களில் 1,199 மக்கள் வசிப்பிடங்களில் 593 இடங்களில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 606 இடங்களில் தொற்று பாதிப்பு இல்லை.
மாவட்டத்தில் மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுவரை 73 ஆயிரத்து 28 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
கடந்த 4 நாட்களில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 14 ஆயிரத்து 932 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம் உயிரை காக்கும் கவசமாக தடுப்பூசி உள்ளது. எனவே தகுதிவாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு்ள்ளது.